Advertisment

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது; தமிழக அரசின் வாதங்களை அடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
sterlite factory case chennai high court - ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணை ஜூன்.27 தொடங்கும் - சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது; தமிழக அரசின் வாதங்களை அடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விதிகளை மதிக்காததால், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கக் கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்களும், சில இயக்கங்களும் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தன. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போராட்டம் 100 ஆவது நாளை எட்டிய நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தின. அப்போது வன்முறை ஏற்பட்டதாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கு கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ​​"தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துழைக்கும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம்" என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

ஆனால், தமிழக அரசு இந்த ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ”ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதிகளில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுஎன்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 21) மீண்டும் வந்தது. அப்போது வேதாந்தா தரப்பில், "நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்திற்குள் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நிபுணர் குழுவை அமைப்பது குறித்து தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், "ஆலை மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் கண்டறிந்தன. ஆலையிலிருந்து ஜிப்சம் மற்றும் தாமிரக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தவறான தகவல்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே ஆலையை இயக்க அனுமதிக்க கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், "ஆலை அங்கிருந்து வெளியேறுகிறது என்றால் கழிவுகளை யார் அகற்றுவது? பல்வேறு கடும் நிபந்தனைகளை விதித்து ஆலையை இயக்க அனுமதிக்கலாமே?" என்று கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, "கழிவுகளை ஆலை நிர்வாகம்தான் அகற்ற வேண்டும். இல்லை என்றால் அவர்கள் செலவில் அரசு அகற்றும். ஏற்கனவே விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை. அதை செய்யாத ஆலை நிர்வாகத்திற்கு மறுபடியும் நிபந்தனை விதித்தாலும், பின்பற்றுவார்கள் என எப்படி நம்ப முடியும்? ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், சுற்றியுள்ள நிலத்தடி நீரை கடுமையாக மாசடைய வைத்துள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்ற நிலை உருவாகியுள்ளது. அந்த வகையிலேயே ஆலை இயங்கக் கூடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, "தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sterlite Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment