அமலாக்கத்துறை கைது விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து முடிந்து, குணமடைந்ததையடுத்து தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்த மதுரை வழக்கறிஞருக்கு ஐகோர்ட் ஜாமீன்
இந்த நிலையில், ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது, “ஊழல் உட்பட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது கொடுக்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார், இடையூறுகளை வழங்கினார். தனிப்பட்ட முறையில் அவரிடம் விசாரணை நடத்துவது மிக மிக அவசியமாகும். செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சி செய்தபோது அவர் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. எனவேதான் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே உச்ச நீதிமன்றம், அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்க துறைக்கு உரிமை, அதை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். கஸ்டடி வழங்காவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். கைதுக்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டோம். அமலாக்கத் துறை விசாரணை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கிவிட்டோம். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்க வேண்டும். அப்படி விசாரித்தால்தான் பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண முடியும். ஒருவர் கோர்ட்டு காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது. தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினாலும் உடலில் எந்த காயங்களையும் அவர் நீதிபதியிடம் காட்டவில்லை,” என்று துஷார் மேத்தா வாதங்களை அடுக்கினார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil