சென்னை உயர்நீதிமன்றத்தில் மொபைல் போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக கூறி தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை அமபைத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், '90-களில் பிறந்த இளைஞர்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதைப்போலவே இன்றைய இளைஞர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதிலாக, இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கும் அளவிற்கு சமூகம் பக்குவமடைய வேண்டும்.
ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிகளில் இருந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் எனக்கூறி அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் உரிமை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று திங்கள்கிழமை நீதிபதிகள் வாசித்தனர். அதில், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம். குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக Child Sexual and Exploitative and Abuse Material பயன்படுத்தும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் அதன் சட்டரீதியான விளைவுகள் குறித்த சில வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வகுத்து உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.