தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டது, பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் குறுகீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தம்ழிநாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
தீர்ப்பின் விவரங்கள் பின்வருமாறு:-
குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உள்ளது. 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என்று கண்டித்த நீதிமன்றம், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பட்டு நேர்மையானதாக இல்லை, ஆளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரங்கள் இல்லை, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்றம், சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பில் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், விதிகள் அடிப்படையில் ஆளுநர் செயல்படாமல் இருந்துள்ளார் எனவும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. பொதுவான விதியின்படி ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.