டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு அந்த சின்னத்தை ஒதுக்கவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
குக்கர் சின்னம் தீர்ப்பு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தினகரன் வரவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யதார்.
இந்த வழக்கு கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் அமமுக கட்சி பதிவு செய்யப்படாத அரசியல் கட்சி எனவே அவர்களுக்கு நிரந்தர சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடப்பட்டது.

ஆனால் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் அமமுகவை பதிவு செய்ய இயலாது எனவும் தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியும் என்கிற வகையிலும் தினகரன் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு குக்கர் சின்னத்தை தினகரன் கட்சிக்கு ஒதுக்குவது பற்றிய தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு இருந்த நிலையில், “டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம். ஆனால் இந்த வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் இந்த தீர்ப்பை அடுத்து முடிவெடுத்த தேர்தல் ஆணையம், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரன் பேட்டி
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தியாக துருகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், குக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு, நிச்சயம் குக்கர் சின்னம் கிடைக்கும், என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமமுக காசு கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை என்ற டிடிவி.தினகரன், தாம் சினிமா நடிகர் அல்ல என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தம்மை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறினார்.