கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் சுரேஷ் ராஜன். மு.க. ஸ்டாலினின் தீவிர விசுவாசியான இவர், பிள்ளைமார் (வெள்ளாளர்) சமூகத்தைச் சேர்ந்தவர். நாடார் சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் இந்த மாவட்டத்தில் இவர்தான் திமுகவில் பொறுப்பில் இருந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் குமரி மாவட்டத்தில் 3க்கு 3 என மொத்த தொகுதிகளையும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.
Advertisment
தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் முறையே அதிமுக, பாஜக வெற்றி பெற்றது.
அமைச்சர் கனவில் இருந்த திமுகவின் ஆஸ்டின் மற்றும் சுரேஷ் ராஜன் தோல்வியுற்றனர். இந்த நிலையில், பத்மநாபபுரம் தொகுதியில் மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சுரேஷ் ராஜனிடம் இருந்து கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பு நாகர்கோவில் மேயர் மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் சுரேஷ் ராஜன் ஒதுக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (நவ.27) திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தணிக்கை குழு உறுப்பினராக சுரேஷ் ராஜன், ஏனாதி பி. பாலசுப்பிரமணியம், ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குமரி மாவட்ட அரசியலில் சுரேஷ் ராஜனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அந்த வகையில், தி.மு.கவில் மீண்டும் 'லைம் லைட்'டுக்கு சுரேஷ் ராஜன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil