சமீபத்தில், ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயரலாளர் செந்தில் வேலவன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 2018-ல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அப்போது, மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அரசின் அனுமதி கிடைக்காததால, இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறாமல் போனது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.29.50 லட்சம் முன் பணம் வழங்கப்பட்டதாகவும் இசை நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் அந்த தொகையை திரும்ப தருமாறு ஏஆர் ரகுமானுக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் கடிதம் அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரகுமான் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை எனக் கூறி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்க நிர்வாகி செந்தில் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ஏ.ஆர்.ரகுமான் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் கோரியுள்ளனர். இந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதால் பெரும் சர்ச்சையானது.
இசை நிகழ்ச்சிக்கு அனுமதி பெறப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் டிக்கெட் விற்பனை செய்ததால், ஒரே நேரத்தில் அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் இல்லாதவர்களும் உள்ளே நுழைந்ததால், டிக்கெட் வாங்கியவர்கள் பலரும் இசை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் குளறுபடிகளுக்கு ஏ.ஆர். ரகுமான் முழுமையாக பொறுப்பேற்று பதில் அளித்தார். மேலும், டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்படி பணமும் திருப்பி அளிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயரலாளர் செந்தில் வேலவன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஏ.ஆர். ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன், “ரூ.3 கோடிக்கு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு அதற்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை அவர்களே ரத்து செய்தார்கள் என்பதால் ஒப்பந்தத்தின்படி அந்த பணத்தை திருப்பி தரவில்லை.” என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அளித்த புகாருக்கு ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன் விளக்கம் அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“