Suriya's Statement: ஏழை மாணவர்களுக்கு சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்படுவதை உணர்ந்தே, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து தாம் கருத்து தெரிவித்ததாக நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “கல்வி என்பது ஒரு சமூக அறம், பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.
அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்கு பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது.
உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மானவர்களை நுழைவுத்தேர்வுகள் துடைத்து எறிந்து விடும்.
அனைவரின் பேரன்புக்கும், பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!???????? #NEP #AgaramFoundation @agaramvision #தேசியகல்விகொள்கை #NationalEducationPolicy pic.twitter.com/IpBaZYx9tH
— Suriya Sivakumar (@Suriya_offl) 20 July 2019
சமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான இலவசக்கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கும் ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது. சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட சக ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை அறிந்த சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி .
வரைவு புதிய கல்விக்கொள்கை பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இணையதளத்தில் கூறுங்கள். மத்திய அரசும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப்பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்" என அந்த அறிக்கையில் விளக்கமளித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.