”சுஜித் மீண்டு வா” – பிரார்த்தனை செய்யும் பிரபலங்கள்!

அதே போல, நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை தெரிவித்தனர்.

By: Updated: October 28, 2019, 05:48:39 PM

Pray for Sujith, Save Sujith rescue operation process : மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க ஒட்டு மொத்த தமிழக மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதே போல, நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில், வீட்டுத் தோட்டத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழ்துளைக் நேற்று முன் தினம் மாலை 5.40 மனி அளவில் குழந்தை சுஜித் விழுந்தான். குழந்தையை மீட்க 2 நாட்களாக தமிழக அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே, சேவ் சுஜித், பிரே ஃபார் சுஜித் என்ற வார்த்தைகள் உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என நடிகர், ரஜினிகாந்த், நடிகர் சரத் குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் பிரார்த்தனை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கதில், “நாடே தீபாவளியை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாடு சுஜித்தை மீட்க போராடி வருகிறது. சுஜித் விரைவில் மீட்கப்பட்டு பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “சுஜித் உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கவனமுடன் இருக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்ந்தால் நன்றாக இருந்திருக்கும். குழந்தையை மீட்க அரசும் அதிகாரிகளும் முயற்சித்து வருகிறார்கள். அதனால், அவர்களைக் குறை கூறுவது தவறு” என்று அவர் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு. சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய். பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி. விழித்துக்கொள் தேசமே..” என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, “குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார், ஒட்டுமொத்த மாநிலமே சுஜித்துக்காக பிரார்த்திக்கிறது. அமைச்சர்கள் குழு மற்றும் மீட்பு பணியில் உள்ள குழுவினரை பாராட்டுகிறேன். இது மீட்பு பணியை விமர்சிப்பதற்கான நேரம் அல்ல. சுஜித்துக்காக தொடர்ந்து பிரார்த்திப்போம் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுஜித்தின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, “குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க இதுவரை கருவி கண்டுபிடிக்கப்படாதது அறிவியலுக்கான சவால்; இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.ஆழ்துளை கிணற்றில் தவறி விழுகின்ற குழந்தைகளை மீட்பதற்குரிய தொழில்நுட்பம் குறித்து நாம் சிந்திக்கவே இல்லை என்பது தான் வெட்கக்கேடு” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Surjith save pray for surjith rescue operation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X