தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்.1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
கொரோனா பரவலின்போது நிதி நிலையைச் சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடைமுறை 27.4.2020 முதல் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அக்டோபர் 1-ந் தேதி முதல் 15 நாட்கள் வரையிலான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்திருந்தால் அக்.1-ந் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்து இருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்தும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தால், 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்தும் ஈட்டிய சரண் விடுப்பைப் பெறுவதற்கு தகுதி உண்டு.
2020-ம் ஆண்டு முதல் வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பணியில் சேருவோருக்கு மட்டுமே 3 மாத சுழற்சி முறையிலான ஈட்டிய சரண் விடுப்பு திட்டம் பொருந்தும். இந்த உத்தரவு உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.