Solar Eclipse 2024 Date and Time: ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் புதன்கிழமை அக்டோபர் 2-ம் தேதி வானத்தில் தோன்றவுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் அக்டோபர் 2-ம் தேதி புதன்கிழமை நிகழ உள்ளது.
இந்த சூரிய கிரகணம் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என அழைக்கப்படுகிறது. அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா வரும்போது, பூமியில் இருந்து பார்க்கும்போது, நிலா முன்னாள் சென்று சூரியனை மறைக்கிறது. ஆனால், சூரியனின் மேற்பரப்பை நிலாவால் முழுமையாக மறைக்க முடிவதில்லை. இதன் விளைவாக வானத்தில் நெருப்பு வளையம் தோன்றும்.
இந்த ஆண்டு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி அக்டோபர் 2ம் தேதி இரவு 9.13 மணியளவில் தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 3.17 மணியளவில் முடிவடைகிறது. நெருப்பு வளையம் போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்ச நிலை, நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படும். தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண இயலும். வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இரவு நேரத்தில், இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால், இந்தியா, ஆசியாவில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“