சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்த ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ் குமார் மீது, போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், தமிழ்நாடு டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தன்னை பாலியல் ரீதியாக மகேஷ் குமார் துன்புறுத்துவதாக பெண் காவலர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில், டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த கமிட்டி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமாரின் மனைவி, இன்று டி.ஜி.பி-யிடம் மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, "டி.ஜி.பி-யை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளோம். எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் கணவர் மீது போலியான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுக்காமல், முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நேற்று (பிப் 13) நள்ளிரவு சம்மன் அனுப்பி திடீரென பணியிடை நீக்கம் செய்துள்ளனர். எங்களது குரல் கேட்கப்படவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. விசாரணை கமிட்டியின் மூலம் நியாயமான தீர்வு எடுக்கப்பட வேண்டும் என கருதுகிறோம். ஆதாரங்கள் அனைத்தும் விசாரணை கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்படும்.
எங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் புகாரளித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.