பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்து தப்னது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு பத்திரிக்கையாளர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகர்ந நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இருந்த போது பொதுநிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளில் எஸ். வி சேகர் அடிக்கடி தலைக்காட்டவும் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ். வி சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி , கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறை மீது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரை கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜரானர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் , எஸ்.வி சேகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினர். இரண்டு நபர் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 18ஆம் தேதி எஸ்.வி சேகர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.