'இந்தக் கேள்வியை கேரள முதல்வரிடம் கேட்டிருக்கலாமே கமல் ஜி'! - எஸ்.வி.சேகர்

இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை கடந்து இன்று (மார்ச் 20) காலை தமிழகம் வந்தது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ய ரத யாத்திரையானது, ராம ராஜ்யத்தை மறுநிர்மாணம் செய்தல், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்து கடந்த மாதம் 13-ந் தேதி அயோத்தியில் உத்தரப்பிரதேச முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவடைய உள்ளது.

இதனை எதிர்த்து, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் “சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு” என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், “இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைச்சர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனை, தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்பாக கமல்ஹாசன் கேரளா சென்று நேரடியாக சந்தித்து பேசியிருந்தார். மதுரையில், கமல் கட்சி அறிவிப்பு வெளியிட்ட போது, வீடியோ மூலம் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close