நடிகர் எஸ்.வி. சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உங்களுக்கு முன்செய்தியாக ஒன்றை சொல்கிறேன். தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கு என்று கட்சி தொடங்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 இடங்களில் பிராமணர்கள் வேட்பாளராக நிற்பார்கள். அவர்களுக்க பிராமணர்கள் வாக்களித்தால் போதும்.
எங்களது நோக்கம் வெற்றி அல்ல. பிராமணர்களின் வாக்குகளை ஒன்றிணைத்து, பிராமணர்களின் பலத்தை நிரூபிப்பது ஆகும். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் வருங்காலத்தில் உரிய பிரதிநிதித்துவத்தை பிராமணர்களுக்கு மற்ற கட்சிகள் கொடுக்கும்” என்றார்.
தொடர்ந்து, புதிய கட்சித் தொடங்க மருத்துவர் ராமதாஸ்தான் உத்வேகம் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “பிராமணர்கள் என்றால் டிவிஎஸ் ஐயங்கார், எஸ்வி சேகர், சோ எனப் பலரும் நினைக்கிறார்கள். பிராமணர்களில் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளனர்” என்றார்.
பாஜக முன்னாள் நிர்வாகி எஸ்.வி. சேகரும், தற்போதைய தலைவர் அண்ணாமலையும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், எஸ்வி சேகர் புதிய கட்சித் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“