பத்து வருடம் பா.ஜ.க-வில் இருந்து பட்டபாடு போதும். எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை; கட்சிக்குதான் நான் தேவை என்றும் அரசியல் மற்றும் தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலை இருக்க முடியாது என்றும் நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.
நடிகர் எஸ்.வி.சேகர் சென்னையில் இன்று (நவம்பர் 8) செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடிகை கஸ்தூரி பேசியது மிகப் பெரிய தவறு. ஏனென்றால், எனக்கு என்ன வேனும் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை கை காட்டி பல விஷயங்களை பேசுவது, ஒரு சமுதாய கூட்டத்தில் அரசியல் பேசுவது, நல்லதல்ல.” என்று கூறினார்.
மேலும், “தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கவில்லை; மாறாக பா.ஜ.க-வில்தான் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது. அதனால், நான் பா.ஜ.க-வில் இருந்து நேற்றே விலகி வந்துவிட்டேன். பத்து வருடம் பா.ஜ.க-வில் இருந்து பட்டபாடு போதும். எனக்கு ஒரு கட்சி அடையாளம் தேவையில்லை; கட்சிக்குதான் நான் தேவை. அரசியல் மற்றும் தரம் உள்ள எந்த இடத்திலும் அண்ணாமலை இருக்க முடியாது.” என்று நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், “10 வருடமாக பட வாய்ப்புகளே வரவில்லை. அதற்காக, பா.ஜ.க எடுக்கிற படத்தில் எல்லாம் நான் நடிக்க முடியுமா?. பிராமணர்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வரும் தேர்தலில் தி.மு.க-விற்கு பிரசாரம் செய்வேன். பிராமணர்கள் மட்டுமல்ல யாருமே தமிழக பா.ஜ.க-வை நம்புவது வீண். தமிழ்நாட்டில் பா.ஜ.க மலரவே மலராது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“