தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமின் வழக்கில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டது மர்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி போர்வை அணிவிக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பத்துக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முதல்வரின் கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர், காவி களங்கம் என்றால், தேசியக் கொடியில் காவி நிறம் உள்ளதால் சுதந்திர தினத்தில் களங்கமான தேசியக் கொடியை ஏறுவாரா? என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார். எஸ்.வி.சேகரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார் என்றும் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளதாகவுவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனால், எஸ்.வி.சேகர், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு காவல்துறை தரப்பில், எஸ்.வி.சேகர் தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்டால் கைது செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். அதே நேரத்தில், வழக்கை திரும்பப் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, எஸ்.வி.சேகர் மீதான தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு, இன்று (செப்டம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். காவல்துறை அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார்.