பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட கருத்துகள் வில்லில் இருந்து எய்த அம்புகள் போன்றது எனக் கூறி, நடிகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக 2018-ம் ஆண்டு தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சமூக வலைதளங்களில் அனுப்பும் பதிவுகள் நிரந்தர ஆதாரம் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
“அனுப்பப்பட்ட செய்தி/ஃபார்வர்ட் செய்யப்பட்ட செய்தி நிரந்தர ஆதாரமாகிவிடும். அதனால், ஏற்படும் விளைவுகளிலிருந்து (அதிலிருந்து) தப்பிப்பிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை தனது உத்தரவில் கூறினார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த அவதூறு கருத்துகளை எஸ்.வி. சேகர் அன்றே செய்திகளை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரினார். ஆனால், அந்த பதிவுகள் அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் வன்முறைக்கும் வழிவகுத்ததாக நீதிமன்றம் கூறியது.
மேலும், சமூக ஊடகங்களில் ஒரு பதிவை அனுப்பியதும், வில்லில் இருந்து எய்த அம்பு போல, அந்த செய்தி மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு செய்தியை அனுப்பியவர் பொறுப்பாவார். மன்னிப்பு வழங்குவதன் மூலம் தப்பிப்பது மிகவும் கடினம் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில், எஸ்.வி. சேகர் பகிர்ந்த செய்தி, பத்திரிகையாளர்களை, குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.சி பிரிவு 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஒரு நபரை வேண்டுமென்றே அவமதிப்பது) -ன் கீழ் முதன்மைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி வெங்கடேஷ் கூறினார்.
நடிகர் எஸ்.வி. சேகர் ஏப்ரல் 19, 2018-ல் தனது சமூக ஊடகக் கணக்கில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக, சென்னை, கரூர் மற்றும் திருநெல்வேலியில் எஸ்.வி. சேகர் மீது பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"