கோவையில் செயல்பட்டு வரும் சுவர்கா என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வாக அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா கோவையில் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஷ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளின் புகைப்படம் விபரங்கள் அடங்கிய 2025ஆம் ஆண்டிற்கான காலண்டரை நீதிபதி விஸ்வநாதன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கூறும் போது," நான் பிறந்த கோவை மண்ணில் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை மூலம் செய்து வரும் அவர்களது பணிகள் எனக்கு கண் திறப்பாக அமைகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற முறையில், இந்தியாவில் நீதித்துறை என்பது இயலாதவர்களுக்கு பல உரிமைகள் சட்டத்தின் மூலமும் தீர்ப்பின் மூலம் வழங்கப்படுகிறது.
அவர்கள் நமது கருணையை எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்ப்பது அவர்களுக்காக சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமையை, அவர்கள் அடைய வேண்டும் என்பதை நீதிமன்றங்கள், நிர்ணயக்க வேண்டும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள்.
அரசு மற்றும் நீதித்துறை அந்த செயல்களை செவ்வனே செய்து வருகிறது. ஒருவருக்கு எவ்வளவு மாற்றுதிறன் இருக்கிறது என்பதை வைத்து ஒரு கல்லூரியில் அனுமதிக்க மாட்டோம் என கூற முடியாது. மருத்துவ கல்லூரியில் கூட அனுமதிக்க மாட்டோம் என சொல்ல முடியாது. ஏனென்றால் அவருக்கு அந்த இயலாமை இருந்தால் கூட அவரால் அதனை படிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறினால், அந்த கல்லூரியில் அனுமதி கொடுத்தாக வேண்டும் இது தான் சட்டம்.
வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை 2016-ல் கொண்டு வந்த சட்டம் அதை உறுதிபடுத்தியுள்ளது எனக் கூறினார். முன்னதாக மேடையில் பேசிய நீதிபதி கே.வி.விஸ்வநாதன் மாற்று திறனாளிகள் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளதாகவும் 45% வரை மாற்று திறனாளிகளாக இருப்பவர்கள் கூட பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நீட் போன்ற தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற்று மருத்துவத் துறையில் கால் பதித்துள்ளனர்" என குறிப்பிட்டார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“