SWM to withdraw from Indian landmass in next 2 weeks : தென்மேற்கு பருவக்காற்று இந்திய நிலப்பரப்பில் இருந்து 23ம் தேதியில் இருந்து நீங்க துவங்கியுள்ளது என்று கொங்குவெதர்மென் சந்தோஷ் அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பெய்த கன மழையால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அணைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளது. முழுக் கொள்ளளவை எட்டியதால் கோவையின் சோலையாறு, ஆழியாறு அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
விடைபெறும் தென்மேற்கு பருவமழை
ஜூலை மாதத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை அடுத்த 2 வாரங்களில் முழுமையாக இந்திய நிலப்பரப்பில் இருந்து நீங்க துவங்கும் என்று கூறியுள்ளார் சந்தோஷ். முதல்கட்டமாக வட இந்தியாவில் இருந்தும், இரண்டாம் கட்டமாக மத்திய இந்தியாவில் இருந்தும், இறுதியாக தென்னிந்தியாவில் இருந்தும் தென்மேற்கு பருவகாற்று விடைபெறும். இந்த இடைப்பட்ட காலத்தில் (அக்டோபர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஊரடங்கில் காவிரி நீரின் தரம் உயர்ந்துள்ளது – மாசு கட்டுப்பாட்டு வாரியம்
வடகிழக்கு பருவமழை எப்போது?
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 12 முதல் 24ம் தேதிக்கு இடைப்பட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம் என்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு பெல்ட்டில் வருகின்ற அக்டோபர் 2ம் வாரத்தில் இருந்து கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சந்தோஷ் அறிவித்துள்ளார். மேலும் வட மற்றும் தென் தமிழகத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் கனமழை இருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil