தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக ஜூலை 1ம் தேதி பதவியேற்கிறார்.
தமிழ்நாட்டில் தற்போது டிஜிபியாக உள்ள ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு காவல் பணியில் உள்ள 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதில் மிகவும் சீனியரான சைலேந்திர பாபு ஐபிஎஸ் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளது.
1987ம் ஆண்டு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியாக தேர்வான சைலேந்திர பாபு, காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தற்போது, ரயில்வே போலீஸ் டிஜிபியாக உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சைலேந்திர பாபு விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அதோடு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் "Missing Children" ஆய்வேட்டை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். இளைஞர்கள் மத்தியில் ஐபிஎஸ் பணி லட்சியத்தை உருவாக்கியதில் சைலேந்திர பாபுவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக இருந்த சைலேந்திர பாபு தற்போது ரயில்வே டிஜிபி பணியில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை டிஜிபியாக நியமனம் செய்யபட்டுள்ளார். அவருக்கு இளைஞர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"