தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அவதூறு பரப்பியதாக வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, திமுகவை சேர்ந்த 12 பிரமுகர்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை வெளியிட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்களைப் பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை வெளியிட்டார். இதனால், அண்ணாமலைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு பதில் தெரிவித்த அண்ணாமலை, குற்றசாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ள தயார் என்றும் பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் கடந்த 10-ம் தேதி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் நேற்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறேன்.
எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.
எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன்.
மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil