டி.ராஜேந்தர்... தமிழ் சினிமாவில் அஷ்டவதானியாக ஜொலித்த இவரால், அரசியலில் பெரிதாக ஜெயிக்க முடியவில்லை. திமுக, பிறகு தாயக மறுமலர்ச்சி கழகம், மீண்டும் திமுக, பிறகு லட்சிய திமுக என சளைக்காமல் அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
டி.ராஜேந்தர் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து, ‘அரசியலில் இவ்வளவு நாளும் சத்திரியனாக இருந்தேன். இனி சாணக்கியனாக இருப்பேன். பிப்ரவரி 28-ம் தேதி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன்’ என ‘பில்டப்’ கொடுத்தார்.
டி.ராஜேந்தரின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடுமையாக வறுபட்டது. அவர் அரசியலை விட்டு விலகப் போவதாக சிலரும், சிம்புவை சினிமாவில் இருந்து அரசியல் தளத்துக்கு நகர்த்தப் போவதாக வேறு சிலரும் ஹேஸ்யங்களை உலவ விட்டனர்.
பரபரப்பான எதிர்பார்ப்புக்கு இடையே ஏற்கனவே அறிவித்தபடி இன்று (பிப்ரவரி 28) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர். வழக்கத்தைவிடவும் மீடியா கூட்டம் எகிறியது, ‘லைவ் கவரேஜ்’ வசதிகளுடன்! மீடியா முன்பு வந்து அமர்ந்த டி.ராஜேந்தர் முதலில் ஸ்ரீதேவியை வழக்கமான தனது அடுக்கு மொழியில் புகழ்ந்து தள்ளினார். இரு நிமிடங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்து ‘லைவ்’ ஓடவிட்ட சேனல்காரர்கள் இதில் கடுப்பானார்கள். ‘மவுனமாக இவர் அஞ்சலி செலுத்துவதை லைவ் செய்யவாய்யா நாம் வந்தோம்’ என சிலர் நொந்து கொண்டனர்.
அடுத்து, ‘4 முக்கியமான தலைவர்களின் ஆத்மாக்கள் என்னை வழிநடத்த இருக்கின்றன. அந்தப் படங்களை இப்போது உங்களிடம் காட்டப் போகிறேன்’ என ‘சஸ்பென்ஸ்’ வைத்துவிட்டு, எழுந்தார் டி.ராஜேந்தர். ‘அட... இது புதுசா இருக்கே!’ என மீடியாக் காரர்கள் பரபரப்பானார்கள். அங்கு திரைச் சீலையை அவரே கட்டை அவிழ்த்து அகற்றினார். ஒரு படமும் தெரியவில்லை. காரணம், இன்னொரு திரைச் சீலையும் உள்ளே கட்டப்பட்டிருந்தது.
அடுத்த திரைச்சீலையை அவரும், அவரது உதவியாளர்களும் இணைந்து அகற்றினர். உள்ளே தமிழர்கள் ரொம்பவே பார்த்துப் பழகிய பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இவர்களின் எம்.ஜி.ஆரை எதிர்த்து ஒரு காலத்தில் கடுமையாக அரசியல் செய்தவர் டி.ஆர்.! ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலிலேயே போட்டியிட்ட அனுபவமும் டி.ஆர்.ருக்கு உண்டு.
பழுத்த ஆன்மீகவாதியான இவர் பெரியார் படத்தை முன்னிலைப் படுத்தியதையும் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியாக அவரே ஒரு விளக்கம் கொடுத்தார். ‘இந்த 4 தலைவர்களுக்கும் நேரடி வாரிசு இல்லை. நான் அவர்களின் கொள்கைகளுக்கு தத்துப் பிள்ளையாக இருப்பேன். அவர்களின் ஆன்மா எனக்கு வழிகாட்டும்’ என்றார் டி.ஆர். இதில் என்ன சாணக்கியத்தனம் என நிருபர்கள் கேட்கவும் இல்லை, டி.ஆர். சொல்லவும் இல்லை.
தவிர, ‘லட்சிய திமுக’ என்கிற தனது கட்சியை ‘இலட்சிய திமுக’ என ஒரு எழுத்தை மட்டும் மாற்றி அமைத்து அங்கே பேனர் வைத்திருந்தார் டி.ஆர். அதாவது, ‘லதிமுக’ என அழைக்கப்பட்ட டி.ராஜேந்தர் கட்சி இனி ‘இதிமுக’ என அழைக்கப்படுமாம்!
தொடர்ந்து டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியது இதுதான்! ‘தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். கொள்கைகளை தாங்கிப்பிடித்த அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்று சிலர் கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.
பெரியாருக்கும், அண்ணாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை. இந்த நால்வர் ஆன்மாக்களின் நல்ல கொள்கைகளுக்கு, நான் ஒரு தத்துப்பிள்ளை. இவ்வாறு அவர் கூறினார்.