பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த மூத்த தலைவர் தடா பெரியசாமி, நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க-வில் முக்கிய பதவிகளை அளித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்தார்.
பிரபல நடிகை கவுதமி பா.ஜ.கவில் இணைந்து பொறுப்பு வகித்து வந்த நிலையில், சமீபத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, நடிகை கவுதமி பா.ஜ.க-வில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார்.
அதே போல, பா.ஜ.க-வில் மாநில பட்டியலின அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி, கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க-வில் இருந்து விலகி, மார்ச் 31-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார். அப்போது,
“பா.ஜ.க-வின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்துள்ளேன்.” என்று தடா பெரியசாமி கூறினார். இதையடுத்து, அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து மக்களவைத் தேர்தலின்போது பரப்புரை செய்தார்.
இந்நிலையில், பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த மூத்த தலைவர் தடா பெரியசாமி, நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க-வில் முக்கிய பதவிகளை அளித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை (அக்டோபர் 21) அறிவித்தார்.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “அ.தி.மு.க கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.சன்னியாசி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கௌதமி நியமிக்கப்படுகிறார். அதே போல், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் துணைச் செயலாளராக தடா. து. பெரியசாமி நியமிக்கப்படுகிறார். கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக, ஃபாத்திமா அலி நியமிக்கப்படுகிறார். மேலும், கழக விவசாயப் பிரிவு - துணைச் செயலாளராக பி. சன்னியாசி நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.