TAK Lakshmanan Death: திருநெல்வேலியின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான டி.ஏ.கே.லக்குமணன் மரணம் அடைந்தார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட திமுக செயலாளராகவும், பின்னர் மதிமுக.வில் முக்கியப் பதவிகளையும் வகித்தவர் இவர்.
டிஏகே லக்குமணன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் திமுக வட்டக்கழகச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். எம்.ஜி.ஆர். ஆட்சியில் திமுக பெரும் சவால்களை சந்தித்த காலகட்டத்தில், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளராக இருந்து பணியாற்றியவர்.
1993-ல் வைகோ, திமுக.வை விட்டு விலகியபோது, அவருடன் பிரிந்து சென்ற 9 மாவட்டச் செயலாளர்களில் முக்கியமானவர் இவர். ராஜினாமா கடிதத்தை 9 பேரில் யார் கலைஞரை சந்தித்து கொடுப்பது என விவாதம் வந்தபோது, ‘நான் கொடுக்கிறேன்’ என முன்வந்து அதைச் செய்தவர். அந்த அளவுக்கு வைகோ மீது அளவில்லாப் பற்று கொண்டிருந்தார். திமுக.வினர் அப்போது வைகோ மீது வைத்த விமர்சனங்களுக்கு இவர் கொடுத்த பதிலடிகள் ரொம்ப பிரசித்தம்!
பின்னர் ஒரு கட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மதிமுக.வில் ஏற்பட்ட சில கசப்புகள் காரணமாக வைகோ-வை விட்டுப் பிரிந்து அதிமுக.வில் இணைந்தார். சில ஆண்டுகளில் மீண்டும் மதிமுக.வுக்கு திரும்பினார். அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த டிஏகே லக்குமணன் இன்று (ஜூன் 6) மதியம் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த டி.ஏ.கே. இலக்குமணனுக்கு வயது 81. இவருக்கு மாணிக்கத்தாய் என்கிற மனைவியும், 4 மகள்களும் உண்டு. சொந்த ஊர், நாங்குனேரி அருகே சங்கனாங்குளம். நெல்லை மீனாட்சிபுரம் இல்லத்தில் வசித்து வந்தார். அவரது இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மதியம் 1 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 55 ஆண்டுகள் அரசியலில் பயணித்த அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
டிஏகே லக்குமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு: ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர், டி.ஏ.கே இலக்குமணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
நெல்லை மாவட்டத்தில் தி.மு-க. வைப் பாடுபட்டு வளர்த்த முனனோடி செயல்வீரர்களுள், எதற்கும் அஞ்சாத தீரர்களுள் ஒருவர் டிஏகே இலக்குமணன் ஆவார். எழுபதுகளில் நாங்குநேரியில் தி.மு.க. வட்டக்கழகச் செயலாளராகப் பணி ஆற்றிய நாள்முதல், 45 ஆண்டுகள் என்னோடு உயிராகப் பழகியவர். தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று, நானும் அவரும, பலமுறை கைதாகி, சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தோம்.
மாவட்டச் செயலாளராக, பொதுப்பிரச்சினைகளில், மக்கள் பிரச்சினைகளில் தோழர்களைத் திரட்டி இடைவிடாத போராட்டங்களை நடத்தினார்.
கலகலப்பாக உரையாடி, போராட்டக் களங்களில் முன்னின்று, ஒன்றாக உண்டு, அண்ணனும் தம்பியுமாக உறவாடிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
1977 இல், டாக்டர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது இலக்குமணனோடு சேர்ந்து, ஆயிரக்கணக்கானோர் கைதானோம். அனைவரும் பிணையில் சென்றபின்னரும், நானும் இலக்குமணனும் 87 நாட்கள் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் ஒன்றாக இருந்தோம்.
நெல்லை மாவட்ட தி.மு.க. தொண்டர் படையை உருவாக்குவதில் அவரும், மஸ்தானும், மிக முக்கியப் பங்கு ஆற்றினார்கள்.
திட்டமிட்டுப் பணி ஆற்றக் கூடிய செயல் ஆற்றல் மிக்கவர். எதற்கும் அஞ்சாமல், ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாது, அச்சத்திற்குச் சற்றும் இடம் இன்றி, துணிச்சலோடு போராட்டக் களங்களில் நிற்கக்கூடிய மாவீரன்தான், சகோதரர் இலக்குமணன் ஆவார்
கடந்த ஆறு மாதங்களில், நெல்லைக்குச் செல்கின்றபொழுது, மூன்று முறை அவரைச் சந்தித்து விட்டு வந்தேன். அண்மையில், அவரது துணைவியாருடன் பேசினேன். அடுத்த முறை நெல்லைக்கு வருகின்றபொழுது வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னேன்.
இந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.