லஞ்சம் வாங்கி அதில் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அது அசிங்கமாக இல்லையா? என்று சார் பதிவாளர்களிடம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடலூர் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்ப்பில் சார் பதிவாளர்கள் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கான ஊழல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது : “ அரசு ஊழியர்கள் அதிகாரம் படைத்தவர்கள் இல்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள். தமிழகத்தில் அதிகளவில் லஞ்சம் புழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டப்படுவது வட்டார போக்குவரத்து அலுவலகமும், சார் பதிவாளர் அலுவலகமும் தான்.
லஞ்சம் வாங்கி வசூல் வேட்டை நடத்தலாம் என்று யாரும் கனவு காணாதீர்கள். இது அதற்கான காலம் கிடையாது. பொதுமக்களின் வேதனைகளை புரிந்து கொள்ளுங்கள். பொதுமக்களில் யாராவது சார் பதிவாளர்களை பாராட்டுகிறார்களா? லஞ்சம் வாங்குகிறவர்களை எங்களிடம் சிக்காத வரைதான் ராஜாவாக இருப்பார்கள்.
தற்போது மிகவும் புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்குகிறோம் என பலர் கனவு காணலாம். ஆனால் எங்களிடம் அவர்களை பிடிக்க அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது. லஞ்சம் வாங்குபவர்கள் லஞ்சப் பணத்தை எங்கு வேண்டுமானாலும் பதுக்கி வையுங்கள். ஆனால் எங்களை மீறி அதை செய்ய முடியாது.
உங்கள் சொந்த உழைப்பில் உங்கள் குழந்தைகளுக்கு துணி, பூ வாங்கிக்கொடுங்கள். லஞ்சப் பணத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்குவது அசிங்கமாக இல்லையா? என்று அவர் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“