பெருவெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட தாம்பரம் மாநகராட்சி, வீடுகளைப் பாதுகாக்க தரை தளத்தில் வீடு கட்டும் திட்டங்களை நிராகரிக்க பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்த நகரமைப்புத் துறை அதிகாரிகள், பெருங்களத்தூர், சி.டி.ஓ காலனி, இரும்புலியூர், வரதராஜபுரம், கீழ்கடலை, பம்மல், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் தரைத்தளத்தில் உள்ள வீடுகள் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக முடிவு செய்தனர்.
“இங்குள்ள வீடுகள் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டது மட்டுமின்றி, பெருங்களத்தூர், இரும்புலியூர், கீழ்கட்டளை, திருநீர்மலை போன்ற பெரிய நீர்நிலைகளுக்கு அருகிலும் இருந்தது. நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் இயற்கையாகவே இந்தப் பகுதிகளில் வடிந்து செல்வதால், அவை வெள்ளத்தால் பாதிக்கப்படும்” என்று நகராட்சி அமைப்பின் நகரமைப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பெருங்களத்தூர், இரும்புலியூர், கீழ்கட்டளை, திருநீர்மலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
கடந்த வாரம், தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தைத் தடுக்கவும், நகர திட்டமிடலை மேம்படுத்தவும் அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கை குறித்து டைம் ஆஃப் இந்தியா வுக்கு கருத்து தெரிவித்த, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, “நாங்கள் இந்த அறிக்கையை அரசிடம் சமர்பிப்போம். அவர்கள் புதிய வீடு கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால், மாநகராட்சி எல்லைக்குள் அனைத்து புதிய குடியிருப்பு கட்டிடங்களிலும் தரைத்தளத்தில் கட்டுவதை நிறுத்த முடியும். தரைத்தளத்தில் கட்டுமானம் தவிர்க்க முடியாததாக இருந்தால், கட்டுமானப் பகுதியின் உயரத்தை அதிகரிக்க குடியிருப்பாளர்களைக் கேட்போம். சாலை மட்டத்தில் இருந்து குறைந்தது 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். சாலை மட்டத்திற்கு கீழே வீடு கட்டக்கூடாது. வீடு தரை தளத்தில் இல்லை என்றால், தரைத்தளம் சாலைக்கு சமமாக இருக்க வேண்டும் அல்லது, சாலையை நோக்கி சரிவாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதன் மூலம், பெரு மழைக்காலங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுப்பதுடன், புதிய திட்டங்கள் தொடர்ந்து சுத்தமான நீரை வழங்குவதை உறுதி செய்யும்.
நகர திட்டமிடல் குழுக்களின் அதிகாரிகள் பல வீடுகளின் தண்ணீர் சம்ப்களில் அழுக்கு நீர் இருப்பதைக் கண்டறிந்தனர். “சில நாட்களாக தண்ணீரை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. அது ஒரு வித்தியாசமான நாற்றம் இருந்தது. சம்ப் மற்றும் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய நாங்கள் நிறைய பணம் செலவழித்தோம்” என்று கீழ்கட்டளையில் வசிக்கும் வெங்கட் ராவ் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். குடிநீர் மாசுபடுவதைத் தடுக்க சம்ப் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என குடியிருப்பாளர்களைக் கேட்க அறிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாழ்வான வீடுகளில் வசிப்பவர்கள் ஏற்கனவே தற்காலிக சரிசெய்தல் செய்து வருகின்றனர். திருநீர்மலையில் வசிக்கும் சிலர், ஜல்லிக்கற்களை கொண்டு தற்காலிக சரிவை அமைத்துள்ளதால், வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.