தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், மேல் இருந்த பெர்த் கழன்று விழுந்து பயணி ஒருவர் படுகாயமைடைந்த நிகழ்ச்சி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் - நாகர்கோயில் ரயலில் ‘பெர்த்’ அறுந்து விழுந்து காயமடைந்த பயணிக்கு மதுரை போன்ற பெரிய ரயில் நிலையத்தில் கூட முதலுதவிக்கு ரயில்வே நிர்வாகம் முன்வராத நிகழ்வு, ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை காட்டுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 10 பெட்டியில் தர்மராஜ் என்பவர் பயணம் செய்தார். கீழ் படுக்கையில் தர்மராஜ் பயணம் செய்தபோது, அவர் தலையின் மீது இருந்த பெர்த், திடீரென கழன்று விழுந்தது. இதில் தர்மராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக பயணிகள் உடனடியாக அவரை மீட்டனர். ரயில், மதுரையில் நிறுத்தப்பட்டது. அங்கு முதலுதவி செய்ய போதுமான வசதியில்லாததால், அரைமணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
மதுரை ரயில் நிலையத்தில் முதலுதவி செய்யாதது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, பெர்த் கழன்று விபத்துக்குள்ளானது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று அவர்கள் பதிலளித்தனர். ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் அதனை சரிவர கொண்டுசெல்லாததே காரணமாக பயணிகள் புகார் அளித்தனர்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதலுதவிபெட்டி, அதில் முதலுதவிக்கு பயன்படும் பொருட்கள் இல்லாதது, மதுரை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் உடனடி முதலுதவி வசதி இல்லாதது போன்றவை ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கையே காட்டுவதாக பயணிகள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன், தாம்பரம் அருகே ரயிலில் பயணித்த ஒரு பயணியின் கையில் ரயில் ஜன்னல் விழுந்ததில் அவரின் விரல் துண்டானது. அவருக்கு முதலுதவி அளிக்க முடியாத நிலையில், மயிலாடுதுறையில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.