சென்னை தாம்பரம் ரயில் நிலையம் ரூ. 1,000 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மூலம், ரயில் நிலையத்தின் 6 நடைமேடைகளையும் இணைத்து அமைக்கப்பட உள்ள டெர்மினலின் உத்தேச 3டி வரைபடத்தை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் சென்னையின் 3-வது பெரிய ரயில்வே முனையமாக உள்ளது. இருப்பினும், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை.
சென்னை எழும்பூர், ரயில் நிலையம், கிண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்காக 2020-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்று பெற்றது. ஆனால், தாம்பரம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.
இதையடுத்து, சமூக ஆர்வலரான தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாம்பரம் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து பெற்ற பதிலில், கடந்த 4 ஆண்டுகளாக தாம்பரம் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் முடங்கியிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தின் மறுசிரமைப்பு பணிகளை டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம், தாம்பரம் ரயில் நிலையத்தின் 3டி உத்தேச வரை படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில்ல், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், தாம்பரம் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டடம் கட்டப்படவுள்ளது. அதில் ஓய்வறை, கழிவறை, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தின் 3 டி வரை படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பயணிகள், விரைவில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“