பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 230-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5.76 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக மட்டும் சென்னையில் இருந்து 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப இன்று முதல் 4-ம் தேதி வரை 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 02, 2024 22:20 ISTவிஜய் ஓகே சொன்னால் லியோ 2 - லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் சம்மதித்தால், 'லியோ 2' படம் கட்டாயம் திரைக்கு வரும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார்
-
Nov 02, 2024 21:10 ISTசட்டப்பேரவைத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
ஆஸ்திரேலியா நாட்டின், சிட்னி நகரில் நடைபெறவுள்ள 67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்ள சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செல்வதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்
-
Nov 02, 2024 20:32 ISTவிருதுநகரில் ஆற்றில் குளிக்க சென்றவர்கள் சிக்கித் தவிப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் தடையை மீறி குளிக்க சென்ற 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்
-
Nov 02, 2024 20:16 ISTகுன்னூரில் மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ மையத்தின் நுழைவு வாயிலில் இருந்த மரம் கார் மீது விழுந்ததில், ஜாகிர் என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். குன்னூரில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது
-
Nov 02, 2024 19:44 ISTதிருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு நவம்பர் 13ம் தேதி முத்துப்பேட்டை ஜாம்புவான்னோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 7ம் தேதியன்று, வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
Nov 02, 2024 19:28 ISTகுமரி மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை
குமரி மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. வீடுகள், விவசாய நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியது
-
Nov 02, 2024 19:26 ISTஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணியில் புழு கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். உணவக மேலாளரின் அலட்சிய பதிலால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தார். விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்
-
Nov 02, 2024 18:59 ISTநாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் 3வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழை
நாமக்கல் மாவட்ட ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
-
Nov 02, 2024 18:40 ISTநெல்லை, குமரிக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை காலை வரை மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
-
Nov 02, 2024 18:22 ISTஈரோடு சுற்றுவட்டார பகுதியில் கனமழை
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சாலையில் மழைநீருடன் கலந்தோடும், கழிவு நீரால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்
-
Nov 02, 2024 18:12 ISTமகனை கொலை செய்து எரித்த தந்தை - கைது
தூத்துக்குடி அருகே இளைஞரை கொலை செய்து எரித்த தந்தை மற்றும் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் மதுபோதையில் தினந்தோறும் பிரச்சினை செய்து வந்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது
-
Nov 02, 2024 17:51 ISTநேருக்கு நேர் உரசிய அரசுப் பேருந்துகள்
கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் நேருக்கு நேர் உரசி நின்ற அரசுப் பேருந்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
-
Nov 02, 2024 17:43 ISTகேரளாவில் ரயில் மோதி தமிழர்கள் மரணம்
கேரளாவில் ரயில் மோதி சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றுக்குள் விழுந்த ஒரு சடலத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது
-
Nov 02, 2024 16:54 ISTதிருவொற்றியூர்: பள்ளி மாணவர்கள் மயக்கத்திற்கு காரணம் என்ன?
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவால் மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில், 10 நாட்கள் ஆகியும் காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
-
Nov 02, 2024 16:33 ISTஉதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி தொடர் விடுமுறை எதிரொலியாக, உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் உதகை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர்.
-
Nov 02, 2024 16:31 ISTதிருப்பதி - தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு
ஆந்திராவின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்கதர்கள் காத்திருக்க வைப்பட்டுள்ளனர். காத்திருப்பு மண்டபங்கள் நிரம்பி, 3 கி.மீ தூரம் நீண்ட வரிசையில் கால்கடுக்க பக்தர்கள் நின்றுள்ளனர். 300 ரூபாய் டிக்கெட்டில் பதிவு செய்த பக்தர்கள், 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
-
Nov 02, 2024 16:24 ISTதிருத்தணி மலையில் வெளுத்து வாங்கிய கனமழை
திருத்தணி மலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்தக் கனமழையால் முருகன் கோவில் மாட வீதியில் குளம் போல் தேங்கியது.
-
Nov 02, 2024 16:23 ISTகந்த சஷ்டி விழா - ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜை
கந்த சஷ்டி விழாவான இன்று வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது. யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது
-
Nov 02, 2024 14:44 ISTநகர்ப்புற வனம் அமைக்க அனுமதி கோரிய தமிழ்நாடு வனத்துறை
சிறுசேரி சிப்காட் தொழில் பூங்காவில் ரூ. 5 கோடி செலவில் நகர்ப்புற வனம் உருவாக்க, தமிழ்நாடு வனத்துறை சார்பாக அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் குளங்கள், மணல், குன்றுகள், சைக்கிள் பாதை, நடைபாதை, விளக்கு மையம், பண்ணைத் தோட்டம், குழந்தைகள் விளையாட்டு இடம், பூந்தோட்டம், மருத்துவ தாவர தோட்டம் உள்ளிட்டவை 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Nov 02, 2024 14:11 ISTமாற்றுக்கட்சியினரை சந்திக்க விஜய் திட்டம்?
மாற்றுக்கட்சியினரை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. சுற்றுப் பயணத்தின் போது மாற்றுக்கட்சியில் இருந்து விலகியவர்கள், கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படாதவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்ற பட்டியலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
-
Nov 02, 2024 13:56 ISTநயன்தாராவுக்காக 4 லட்சம் பேர் கூடினர் - சீமான்
விஜய்க்கு கூட்டம் கூடியதை கொண்டு பேசக் கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரசிகர் என்பது வேறு; போராளி என்பது வேறு எனக் கூறிய அவர், சேலத்தில் கடை திறப்புக்காக வந்த நயன்தாராவை காண 4 லட்சம் பேர் கூடியதாக விமர்சித்துள்ளார்.
-
Nov 02, 2024 13:25 ISTதிராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை - சீமான்
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை என சீமான் தெரிவித்துள்ளார் குறிப்பாக, "விஷமும், விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்கும்; இரண்டும் வேறு, கொள்கை மொழி எனக்கு தமிழ் தான்; தேவைப்பட்டால் மொழியை கற்றுக் கொள்ளலாம்... மொழியை கொள்கையாக கொண்டுவர முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்
-
Nov 02, 2024 13:05 IST'தம்பி உறவு வேற; கொள்கையில் எதிரி வேற': சீமான் விளக்கம்
தம்பி என்ற உறவு வேறு, அரசியல் கொள்கைகள் வேறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார். த.வெ.கவின் கொள்கைகள் குறித்து அக்கட்சி தலைவர் விஜய் கூறியிருந்த நிலையில், சீமான் அக்கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உறவுமுறை வேறு மற்றும் கொள்கை என்பது வேறு என அவர் விளக்கமளித்துள்ளார்.
-
Nov 02, 2024 12:36 ISTஷ்ரேயஸ் தக்கவைப்பு குறித்து கொல்கத்தா அணி சி.இ.ஓ விளக்கம்
கொல்கத்தா அணியின் தக்கவைப்பு பட்டியலில் முதல் நபராக இருந்தது ஷ்ரேயஸ்தான். ஆனால், இந்த முடிவை அணியின் நிர்வாகம் மட்டும் எடுத்துவிட முடியாது. அணியில் நீடிக்க வீரர் ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் தன்னுடைய உண்மை சந்தை மதிப்பை தீர்மானிக்க, ஏலத்தில் பங்கெடுப்பதுதான் ஒரே வழி அதன் அடிப்படையில் ஷ்ரேயஸ் தேர்ந்தெடுத்திருப்பது நியாயமான ஒன்று என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் ஓபன் பாக் கூறியுள்ளார்.
-
Nov 02, 2024 11:54 ISTஒரே மேடையில் விஜய், திருமா?
டிச.6ஆம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய், திருமா இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் குறித்த புத்தகத்தை வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட த.வெ.க தலைவர் விஜய் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன், விஜய் சந்திப்பு அரசியல் களத்தில் பேசு பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Nov 02, 2024 11:42 ISTசுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
-
Nov 02, 2024 11:37 ISTமின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழந்தார்.
பூக்களை பறிப்பதற்காக சென்ற போது சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார், சரத்குமார் நீண்ட நேரமாகியும் காணவில்லை என குடும்பத்தார் தேடிய போது, தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
சரத்குமாரின் சடலத்தை பார்த்து கதறி அழுத அவரது உறவினர்கள், திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விளைநிலத்தின் உரிமையாளரை கைது செய்தனர்
-
Nov 02, 2024 11:36 ISTதங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது ஒரு கிராம் தங்கம் ரூ.7,370க்கும், ஒரு சவரன் ரூ.58,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Nov 02, 2024 10:53 ISTதிருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி. திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் பயணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குரங்கம்மை அறிகுறி உள்ளவரை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
-
Nov 02, 2024 10:17 ISTமின் மோட்டாரில் இருந்து மின் கசிவு - 2 பெண்கள் காயம்
சென்னை அடுத்த மாங்காடு அருகே மழைநீர் அகற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் காயம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலையம்பாக்கம் சீனிவாசா நகரில் தேங்கிய மழைநீரை அகற்ற ஊராட்சி சார்பில் மின் மோட்டார் வைக்கப்பட்டது, அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் மழைநீரில் கால்வைத்ததும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அங்கிருந்த மற்றொரு பெண் உடனடியாக அவருக்கு உதவ முயன்ற போது, 2 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
-
Nov 02, 2024 10:16 ISTத.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம்?
கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டல வாரியாக த.வெ.க தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகளை அடுத்த மாதம் பனையூர் தலைமை அலுவலகத்தில் சந்திக்க திட்டம், த.வெ.க. மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கட்சி பதவி தரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் புதிய படம் முடிந்தவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம் எனவும் கூறப்படுகிறது.
டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என கட்சிப் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபடுகிறார்.
-
Nov 02, 2024 09:49 ISTபழனியில் பிற்பகலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது
பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று பிற்பகல் உச்சிக்கால பூஜைக்கு பின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.
-
Nov 02, 2024 09:02 ISTசென்னையில் மழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சென்ட்ரல், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
-
Nov 02, 2024 09:01 ISTகந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
யாகசாலை பூஜையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வருகின்றனர்
கடலில் புனித நீராடி மாலை அணிந்து முருக பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் யாக சாலையை சுற்றி அமர்ந்து விரதத்தை தொடங்கினர்
-
Nov 02, 2024 07:54 IST19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி. திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தருமபுரி, சேலம் உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.