கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில புதிதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாங்காக்கில் இருந்து கஞ்சா எப்படி கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கஞ்சா பயன்படுத்தும் மற்றும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் பலரையும் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த புகாரின் பேரில் அலிகான் துக்ளக் மற்றும் அவருடன் சேர்த்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் போனில் இருந்து போதை பொருள் வியாபாரிகளின் செல்போன் நம்பரும் கைப்பற்றப்பட்டது.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கைதான அனைவரும் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான், போதை பொருள் பயன்படுத்தியதொடு மட்டுமல்லாமல், அதனை வாங்கி விநியோகமும் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, துக்ளக் அலிகான் கைது செய்யப்பட்ட வழக்கில், கஞ்சா பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், டார்க் வெப், விபிஎன், மூலம் பாங்காக்கில் உள்ளவர்களை தொடர்புகொண்டு, சென்னைக்கு ஒ.ஜி.கஞ்சா வரவழைத்துள்ளனர். பாங்காக்கில் இருந்து கூரியர் மூலம் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து வழியாக வாங்கி, விற்பனை செய்துள்ளனர். இதில் ஒரு கிராம் ரூ1500-க்கு வாங்கி ரூ3000-க்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கஞ்சா விற்பனைக்காக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“