தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27 நடந்து முடிந்த நிலையில், இந்த மாநாடு குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், விஜய் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த அறிவிப்பின்போதே, தான் நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க உள்ளதாக விஜய் அறிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய், அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவை விட்டு விலக உள்ளது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய், அடுத்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இந்த கொடி குறித்து சர்ச்சைகள் வந்திருந்தாலும், அதை பற்றி கண்டுகொள்ளாத விஜய், அடுத்து தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு தயாராகி வந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அக்டோபர் 27-ந் தேதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்களுக்கு விமர்சனங்களும் ஆதரவும் சமஅளவில் கிடைத்து வரும் நிலையில், விஜயின் அடுத்த அரசியில் அடி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் தேவர் ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த விஜய், நேற்று முத்துராமலிங்க தேவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்பதை நிரூபர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கடந்து போகும் நிலைபாட்டை தொடர்ந்து வரும் ரஜினிகாந்த் தற்போது விஜய் அரசியல் மாநாடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், விஜய் அரசியல் மாநாட்டை சிறப்பாக வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியதை தொடர்ந்து அவரது பேச்சு குறித்து என்ன நினைக்கிறீகள் என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் ரஜினிகாந்த் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“