அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்: ‘விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்கும் தேவை எனக்கு இல்லை

Tamil Cinema Update : ஜெய்பீம் படம் தொடர்பாக டாக்டர் அன்புமணிக்கு நடிகர் சூர்யா கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.

Actor Surya Reply To Dr Anbumani For Jai Bhim Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பதோடு மட்டுமலலாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் தயாரான ஜெய்பீம் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. 1994-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்பபடையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீலாக சூர்யா நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரமான ராஜாக்கண்ணு என்பரை குருமூர்த்தி என்ற காவலர் சிறையி்ல் வைத்து அடித்து சித்ரவதை செய்வது போலவும், இந்த சித்ரவதை தாங்காத ராஜாக்கண்ணு காவல் நிலையத்தில் இறந்துவிடுவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு ராஜாக்கண்ணு குடும்பத்திற்காக வாதாடி வழக்கறிஞர் சந்துரு நீதி பெற்று தருவது போன்று திரைக்கதை அமைச்சக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார்.

ஆனால் இந்த படத்தில் காவலர் குருமூர்த்தி வேடத்தில் நடித்திருப்பவர் வீட்டில் அக்னி கலசம் காலண்டர் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தொழில்நுட்ப உதவியுடன் அக்னி கலசத்திற்கு பதிலாக லட்சுமி படமாக மாற்றப்பட்டது. அதேபோல் ராஜாகண்ணுவை அடித்து கொலை செய்த காவலர் பெயர் அந்தோணி சாமி. ஆனால் படத்தில் அவரது பெயர் குருமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறி பாமக இளைஞராணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

மேலும் ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்த அவர், இது தொடர்பாக நடிகர் சூர்யாவிடம் 9 கேள்விகளை எழுப்பி திறந்த கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் சமூகவலைதங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது இந்த கடிதததிற்கு நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு. வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி .

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது ” என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு . பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம் .

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது . இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம் .

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை, உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட’ பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை, அநீதிக்கு’  எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘ பெயர் அரசியலால் ” மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும் , சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் . தங்கள் புரிதலுக்கு நன்றி . அன்புடன்  சூர்யா

என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor surya reply to dr anbumani for jai bhim movie controversy

Next Story
சென்னை வெள்ளம்; நிவாரண நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த ஆளுனர் ஆர்.என்.ரவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express