தமிழகத்தை அதிர வைத்த விவேக் மரணம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

Actor vivek death: சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்

நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஊசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர். 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை உடன் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் கூறி நடித்து வந்த அவர் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் விவேக். இவருக்கு 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்றவற்றில் மிகவும் அக்கறை காட்டியவர் விவேக். இதுவரையில் 33,23,000 மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்துள்ளார். இளைஞர்களிடம் சூற்றுச்சூழலை காக்க வேண்டும் என அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ள வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சி.. உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல அற்புதமான நினைவுகள் மற்றும் தருணங்கள் எனது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் இதயம் உங்களின் குடும்பத்தினருடன் செல்கிறது.. ரெஸ்ட் இன் பீஸ் மை டியர் பிரண்ட்.. என பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள டிவிட்டில், எங்கள் விவேக் சார் இல்லை என்ற உண்மையை என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றன.. என்ன ஒரு அசாதாரண கலைஞரையும் ஒரு மனிதரையும் நாம் இழந்து விட்டோம்.. அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்.. என பதிவிட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவிட்டில், சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு… வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்! என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. எத்தகைய மனிதர்களையும் இறைவன் சூழ்ச்சியால் காவு கொள்வான் என்றால்.. எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார்.. திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ள பதிவில், விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம். என பதிவிட்டுள்ளார்.

அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் பதிவில், நடிகர் விவேக் கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர். வெறும் கருத்துகளை மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகவில்லை; அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் விவேக்.”

நடிகர் விவேக்கின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor vivek passes away due to cardiac arrest

Next Story
தமிழகத்தில் ஒரே நாளில் 8449 பேருக்கு கொரோனா: மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் அதிகரிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com