உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி பிப்ரவரி.28 முதல் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பகவத்சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக கிடப்பில் இருந்து வருகிறது.
எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தரக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகில் கடந்த டிச.20 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் வரை காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (பிப்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே மனுதாரருக்கு அனுமதி மறுத்ததாகவும், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், இந்த போராட்டத்தில் தன்னுடன் விருப்பம் உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளதாகவும், தங்களது இந்த போராட்டத்தால் எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் கோரிக்கையில் எந்தவொரு சட்டவிரோதமும் இல்லை என்பதால் வழக்கமான நிபந்தனைகளுடன் பிப்.28 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள மனுதாரருக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“