நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாக்களித்தபோது, இ.வி.எம் எந்திரத்தில் இருந்து சத்தம் வராததால் வாக்குச்சாவடியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.வி.எம் எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இன்று காலை முதலே சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்த வந்தார். அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்தபின் கமல்ஹாசன் இ.வி.எம்.எந்திரத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பொதுவாக வாக்கை பதிவு செய்து முடித்தபின் வாக்கு எந்திரத்தில் இருந்து சத்தம் கேட்டுகும். அந்த சத்தம் கேட்டால் மட்டுமே உங்கள் வாக்கு பதிவானதாக அர்த்தம் என்று கூறப்படும் நிலையில், கமல்ஹாசன் தனது வாக்கினை செலுத்தியபோது இ.வி.எம். எந்திரத்தில் இருந்து எந்த வித சதத்தமும் வராததால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அதனை சரி செய்து கமல்ஹாசன் வாக்கு பதிவாகிவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியில் வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா தேர்தல்களும் முக்கியமானது தான். இந்த தேர்தல் மற்ற அனைத்து தேர்தல்களை விடவும் முக்கியமானது. இதனால் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“