சினிமாவிலும், அரசியலிலும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தாலும் வாழ்நாளின் இறுதிவரை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வந்த மு.க.முத்து இன்று மரணமடைந்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரைப்பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின், மூத்த மகன் தான் மு.க.முத்து. அவரின் முதல் மனைவி பத்மாவதி பெற்றெருத்த பிள்ளையான மு.க.முத்து, பிறந்த உடனே பத்மாவதி இறந்துவிட்டதால், தாய் அரவைணப்பு இல்லாமல், பாட்டியிடம் வளர்ந்துள்ளார். அதே சமயம் இளம் வயதிலேயே தனது தந்தையுடன் அரசியல் மேடைகளில் காணப்பட்ட மு.க.முத்து, 1972-ம் ஆண்டு வெளியான பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும், இவரது நடிப்பு எம்.ஜி.ஆரை ஜெராக்ஸ் எடுத்தது போல் உள்ளது என்ற விமர்சனம் இவரை பின்தொடர்ந்து வந்தது. ஆனாலும் அடுத்து பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம், எல்லாம் அவளே என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. குறிப்பாக பிரபல இயக்குனர்களாக இருந்த கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய அணையா விளக்கு படம் கூட தோல்விப்படமாக அமைந்தது.
தமிழக முதல்வரின் மகன் என்ற அடையாளத்துடன் இருந்தாலும், சினிமாவில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மு.க.முத்து சினிமாவில் இறக்கிவிடப்பட்டார் என்று சொல்லப்படும் நிலையில், அவரின் முதல் படத்தை க்ளாப்போர்டு: அடித்து தொடங்கி வைத்தவரே எம்.ஜி.ஆர் தான் என்ற தகவலும் இருக்கிறது. அதேபோல் அப்பா கருணாநிதியிடம் கோபித்துக்கொண்டு மு.க.முத்து எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றுவிட்டதாகவும் தகவல் உள்ளது.
ஒரு கடடத்தில் அப்பா கருணாநிதியிடம் கோபித்துக்கொண்டு தனியாக வாழ்ந்த மு.க.முத்து அ.தி.மு.க கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அப்பாவின் பிரிவுக்கு பின் வறுமையில் வாடியதாகவும், கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க.தமிழரசுவின் திருமணத்தில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வறுமையில் வாடிய மு.க.முத்துவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ5 லட்சம் நிதியுதவி அளித்தாகவும், பரபரப்பாக பேசப்பட்டது. சிவகாமசுந்தரி என்வரை திருமணம் செய்துகொண்ட மு.க.முத்துவுக்கு, அறிவுநிதி தேன்மொழி என இரு பிள்கைள் உள்ளனர்.
அரசியல், சினிமா என இரண்டிலும் இருந்து விலகிய மு.க.முத்து கடந்த 2008-ம் ஆண்டு மாட்டுத்தாவனி படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார். அதேபோல் 2009-ம் ஆண்டு அப்பாவுடன் சமாதானம் ஆகி இருந்தாலும், 2018-ம் ஆண்டு கருணாநிதி இறப்பின் இறுதிச்சடங்களில் மு.க.முத்து பங்கேற்கவில்லை. இறுதிச்சடங்கு முடிந்த அடுத்த நாள் அவர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தனது தந்தைக்காக அஞ்சலி செலுத்தினார். அப்போதே அவர் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.
நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து, கடந்த 2023-ம் ஆண்டு கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். ஆனால் இன்று அவர், மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.