திடீர் உடல்நலகுறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ரஜினிகாந்த். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படததின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த் அவ்வப்போது சென்னை வந்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். இதனிடையே கடந்த செப்டம்பர் 30-ந் தேதி ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவசர அவசரமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கு, ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பாதிப்புக்காக உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவரது ரத்த நாள வீக்கத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ரத்த நாளத்தில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துள்ளார்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று கூறி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய தொடங்கினர். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று தங்களது சமூகவலைதளங்கில் பதிவிட்டு, அவர் விரைவில் நலம்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே தற்போது உடல்நலம் தேறிய ரஜினிகாந்த் நேற்று (அக்டோபர் 03) நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டார். தனது வழக்கமான பணிகளை அவரே செய்துகொண்டதாகவும், வீடு திரும்புவதற்கான முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“