தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தனது கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று அவரது கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம நாயகனாக அறிமுகமான விஜய், தொடர்ந்து தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்தார். இதில் விஜயகாந்துடன் இவர் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படம் சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, நினைத்தேன், வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் என பல காதல் படங்களில் நடித்த விஜய், பகவதி, திருமலை என ஆக்ஷன் படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். குறிப்பாக இவர் படங்களில் காட்டும் மேனரிசம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பெண் ரசிகைகள் அதிகம் உள்ள நடிகர்களின் பட்டியலில் விஜயக்கு முக்கிய இடம் உள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்த விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி சமூகபணிகளை மேற்கொண்டு வந்த விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், அவ்வப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய விஜய், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியை தற்போது தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். தற்போது கட்சி தொடங்கியுள்ள விஜய் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் தான் அவர் போட்டியிடும் முதல் தேர்தலாக இருக்குமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil