தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நிலையில், இந்த அறிமுக விழாவிற்காக அவர் வந்த காருக்கு ரூ4500 அபராதத்தொகை நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சி தலைவருமான விஜய், தமிழ் சினிமாவில், பல விமர்சனங்கள், மற்றும் உருவ கேலிகளை கடந்து இன்று டாப் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். 68 படங்கள் (கோட் சேர்த்து நடித்துள்ள அவர், தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
மேலும் தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். இந்த கட்சி தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், விஜய், கட்சியின் கொடி மற்றும் கொடிக்கான பாடலும் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்புகள் விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.
இதனிடையே கோட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இதுவே அவரின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விஜயின் அரசியல் மற்றும் சினிமாவில் அடுத்த அடி குறித்து பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய கொடி அறிமுக விழாவிற்கு விஜய் வந்த கார் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்திற்கு டி.என். 37 டி.ஆர் 1111 என்ற எண் உடைய, டொயோட்டா இனோவா கிரிஸ்டா காரில் வந்து இறங்கிய விஜய், கட்சி கொடி மற்றும் அதற்கான பாடலை அறிமுகம் செய்து வைத்தார். விஜய் வந்த அந்த கார் மீது ரூ4500 அபராதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் பல்வேறு விதிமுறைகளில் ஈடுபட்டதாக கூறி ரூ4700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசியாக விதிக்கப்பட்ட ரூ200 மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அபராதத்தொகை ரூ4500 நிலுவையில் உள்ள நிலையில், விஜய் தனது கட்சி கொடி அறிமுக விழாவிற்காக அபராதம் கட்டாத காரில் கட்சி அலுவலகம் வந்துள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்த கார், கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.