நடிகர் விவேக்கின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமத்தில் அவரது உருவ படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர், சமூக சீர்திருத்தவாதி, இயற்கை ஆர்வலர் என பல முகங்கள் கொண்டவர் விவேக். சினிமாவில் மட்டுமல்லாது தனது நிஜ வாழ்கையிலும் சமுகத்திற்கு தேவையான பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த இவர், நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணமடைந்தார்.
இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் விவேக் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் கொரோனா தொற்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்படி தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் முக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் நிகழ்ந்த அவரது மரணம் தமிழகத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாக ஆகிவிட்டது. இயக்குநர் பலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட 59 வயதான விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். கடந்த 1961 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் பிறந்தவர் நடிகர் விவேக் (விவேகாந்ந்தன்) தற்போது அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில்,சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராம மக்கள் விவேக்கின் மரணம் குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தொடர்ந்து விவேக்கின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ஊர் பெரியவர்கள் ஒன்றிணைந்து பெருங்கோட்டூர் கிராமத்தில் விவேக்கின் உருவ படத்தை வைத்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விவேக்கின் மரணம் குறித்து அறிந்த அவரது சித்தி இந்திரா பாய் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சுமார் 30 பேர் வேன் மூலம் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டனர்.
மறைந்த நடிகர் விவேக்கின் தந்தை அங்கையா பாண்டியனின் மறைவுக்கு பிறகு அவரது அஸ்தி பெருங்கோட்டூரில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது தாயாரின் உடல் அதே இடத்தில் தகனம் செய்யப்பட்டு சமாதி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் நடிகர் விவேக்கின் உடலும் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் சென்னையிலேயே அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.