மீண்டு வாருங்கள் விவேக் : ஓபிஎஸ் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் விவேக் விரைவில் நலம்பெற வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் மற்றும அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திடீர் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1987-ம் ஆண்டு பழம்பெரும் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விவேக். தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை சேர்ந்த இவர், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார். காமெடியுடன் சேர்த்து சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களையும் கூறி வரும் விவேக், பாலக்காட்டு மாதவன், நான்தான் பாலா உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுடன் நெருக்கமாக இருந்த ஒரே தமிழ நடிகர் என்ற பெருமை பெற்ற விவேக், தற்போது வரை அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் விதமாக தமிழகம் முழுவதும் மரம் வரளப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்ட வருகிறார். மேலும் இதுவரை 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். எப்போதுமே சமூக சருத்துக்களை வலியுறுத்தும் நடிகர் விவேக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

அதன்பிறகு மக்களிடம் உரையாற்றிய அவர், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா பாதிப்பு ஏற்படும். ஆனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு குறைவு என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடையவேண்டும் என்று சக நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறனர். இது குறித்து தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பதிவில், மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, தயவு செய்து விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதையும், இன்று அவருக்கு மராடைப்பு ஏற்பட்டதையும் இணைத்து பேச வேண்டாம். இந்த இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் அவர்களது கடமையை செய்யட்டும். நீங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். வதந்திகளால் கொரோனா தடுப்பூசி குறித்து திசைதிருப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் மராடைப்பு செய்து கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நீங்கள் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்கள். நான் எஸ்ஐஎம்எஸ் இயக்குநர்களுடன் பேசினேன். மேலும் சிகிச்சை அளிக்கும் குழுவுடன் இணைந்துள்ளேன் விரைவில் குணமடையுங்கள் விவேக் என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்; மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில், நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். திரைப்படங்களில் சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட பல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூக சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் நடிகர் விவேக், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் கூறியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌவுந்திரராஜன் தனது ட்விட்டர் பதிவில், திரைப்பட நகைச்சுவை நடிகர் சகோதரர் திரு.விவேக் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண உடல்நலத்துடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில், நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actor vivek has heart attack in hospital addmision

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express