தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி, தற்போது ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணநை்து சில வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் நடிகை கஸ்தூரி தற்போது திரைப்படங்களில் நடிக்காத நிலையில், அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசி வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்துரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூரான கருத்துக்களை பேசியிருந்தார்.
கஸ்தூரி பேசிய இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பல்வேறு காவல்நிலையங்கில் கஸ்தூரிக்கு எதிராக புகார்கள் குவிந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை எழுப்பூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்திய நிலையில், காவல்துறையின் கைதுக்கு பயந்து, நடிகை கஸ்தூரி தலைமறைவானார். அதே சமயம் முன்ஜாமின் கேட்டு கஸ்தூரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கஸ்தூரிக்கு முன் ஜாமின் மறுத்து அவரது மனுவை நிராகரித்தது. இதன் காரணமாக தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு, கஸ்தூரி ஐதராபாத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத் சென்ற தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர்.
ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி, நாளை சென்னையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழங்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“