தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்டு நான் சேரி என்று சொல்லவில்லை நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் சமூகவலைதளங்களில் தற்போது பபரப்பு அதிகரித்துள்ளது.
தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்திருந்த நடிகர் மன்சூர் அலி கான், அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியது பலரின் எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களை எதிர்கொண்டது. கடந்த வாரம் தான் பேசிய கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் நேற்று மன்னிப்பு கோரியதை தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருந்தாலும், இது குறித்து காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டாலும், மகளிர் ஆணையம் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கூறியிருந்தார். மேலும் இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியபோது சேரி ஸ்லாங்குக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் சேரி பாஷை என்று கூறி நடிகை குஷ்பூ தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்துவிட்டார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
குஷ்பூவின் இந்த சர்ச்சை கருத்து குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில், தாழ்த்தப்பட்ட மக்களை குறை கூறி சேரி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. திமுகவை விமர்சித்தால் காங்கிரஸ் கட்சி ஏன் போராட வேண்டும்?
வேளச்சேரி என்ற பெயரில் கூடத்தான் சேரி உள்ளது. யாரையும் குறிப்பிட்டு பேசாத போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். நான் தப்பா பேசல, பிரெஞ்ச் மொழியில் சேரி என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். இந்த சர்ச்சையில் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக கூறினார்கள். நான் வீட்டிற்கு வெளியில் காத்திருந்தேன் ஆனால் யாரும் வரவில்லை என்று குஷ்பூ கூறியுள்ளார்.
மேலும் சேரி என்ற வார்த்தை கவர்மெண்ட் ரெக்கார்டிலேயே இருக்கிறது. வேளச்சேரி இருக்கு செம்மஞ்சேரி இருக்கு. இதில் சேரி என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுங்கள். அந்த வார்த்தையால் தான் பிரச்சனை வருகிறது. எனக்கு தமிழ் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் எனக்கு விளக்கம் கொடுங்கள் சேரி என்றால் என்ன? என்னை பொருத்தவரை எந்த பகுதியில் வாழும் மக்களாக இருந்தாலும் நமக்கு சமமா உட்கார்ந்து பேசி, வாழ்க்கையில் முன்னேற எல்லா உரிமையும் இருக்கு. நான் அவர்களை தாழ்த்தி பேச வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“