Advertisment

விவேக் இறுதி ஊர்வலம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

தமிழ சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் மரணமடைந்த நிலையில், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
விவேக் இறுதி ஊர்வலம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

நடிகர் விவேக் மரணமடைந்த நிகழ்வு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மற்றும் அரசு மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். நடிகர் மட்டுமல்லாது சமூக சீர்த்திருத்தவாதி, இயற்கை ஆர்வலர், இளைஞர்களின் வழிகாட்டி, என பல முகங்கள் கொண்ட இவர் நேற்று முன்தினம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ஆனால் நேற்று திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக வெடித்தது.

இந்நிலையில், விவேக் விரைவில் நலம்பெற வேண்டும் என்று, ரசிகர்கள், சக நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து ரசிகர்களும், சக நடிகர்களும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மாலை 4 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வழி நெடுக்கிலும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த இறுதி ஊர்வலத்தில் திரை பிரபலங்கள், ரசிகர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதால், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலையில், விவேக்கிற்கு காவல்துறை மரியாதை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. மேலும் அவரின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வளர்ப்பு பிள்ளை என்ற அளவில் இருந்த விவேக், அப்துல்காலமை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது கனவை நிறைவேற்றும் விதமாக தமிழகம் முழுவதும் மரக்கன்று நடும் பணியை தொடங்கினார். கிரீன் கலாம் என்ற இந்த திட்டத்தின் மூலம் இந்த பணியை தொடங்கிய விவேக் ஒரு கோடி மரக்கன்று நடுவதை இலக்காக வைத்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக 33 லட்சம் மரக்கன்று நட்ட விவேக் தற்போது மரணமடைந்த நிகழ்வு தமிழகத்தை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vivek
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment