இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்தக் கோரி கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கொங்கு மண்டலத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வர் கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் தமிழ் மன்னர்கள் தரிசனம் செய்ததாக வரலாறு உள்ளது. தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் குடமுழுக்கு விழாவானது 4.12.2020 அன்று நடைபெற உள்ளது. அதனால், எங்கள் பகுதியில் உள்ள மக்கள் இந்த கோயிலில் தமிழ் சைவ ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்றும் தேவாரம், திருவாசகம் ஓதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளருக்கும் கோயில் தரப்பினருக்கும் மனு செய்திருந்தோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆகவே, கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா தமிழ் சைவ ஆகம முறைப்படி தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு தமிழில் குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று கோரிகை வைக்கப்பட்டது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்து கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும்போது இனிவரும் காலங்களில் கட்டாயம் தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்து கோயில் குடமுழுக்கு விழாக்களை சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளில் நடத்துவது பற்றி எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கில் விரிவான உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”