பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
மின்மீட்டர் பொருத்தி விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்க நேரிட்டால் விவசாயிகள் ஒன்றுகூடி அரசை ஸ்தம்பிக்கச் செய்வார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்
விவசாய பம்ப்செட்டிற்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் புதுவை அரசையும், ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து புதுச்சேரி மாநில திமுக தலைமையில், இந்திய தேசிய ஒருங்கிணைந்த வளர்ச்சி கூட்டணி (I.N.D.I.A) சார்பில் பாகூர் மணிக்கூண்டு திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பொருளாளர், பாகூர் தொகுதி எம்எல்ஏ செந்தில் குமார் தலைமை வகித்தார். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதுவையின் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தினோம். புதுவையில் தனியாருக்காக ரூ.250 கோடியில் மின்மீட்டரை அரசே பொருத்துகிறது. கடந்த 5 ஆண்டில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளனர். மின்துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. குறைந்த மதிப்பீடு போட்டு ரூ.25 கோடி செலுத்தினால் மின்துறை தனியார்மய டெண்டரில் பங்கேற்கலாம் என அறிவித்தனர்.
இது மிகப்பெரும் ஊழல் என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் எந்த வழியிலாவது மின்துறையை தனியார் மயமாக்க முயற்சித்து வருகின்றனர். இந்த அரசில் எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காது. திமுக போராட்டம் அறிவித்தவுடன் அமைச்சர், விவசாயிகளுக்கு மின்சாரத்தை இலவசமாகவே வழங்குவோம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு செல்கின்றனர். தற்போது அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை அரசு செய்து வருகிறது.
விவசாயிகள் ஒன்றுகூடி முடிவெடுத்தால் அரசாங்கத்தையே நடத்த முடியாது. மின்துறையை விற்பது எங்கள் கொள்கை முடிவு என ஒரு அமைச்சர் சட்டசபையிலேயே தெரிவித்தார். புதுவையில் பிரீபெய்டு மீட்டாராக மாற்றினால் பணம் கட்டினால்தான் மின்சாரம் வழங்கப்படும். இந்த வசதிகளை தனியார் கொள்ளையடிக்க அரசு செலவு செய்கிறது. விவசாயிகளுக்கு தனியாக மின் இணைப்பு கொடுக்க உள்ளனர். இப்படி செய்தால் இரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரைதான் மின்சாரம் என அறிவித்தால் விவசாயிகள் இரவில் நிலத்தில் சென்று வேலை பார்க்க நேரிடும். இதையெல்லாம் நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதுவையில் வீட்டு சேவைக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.50 வசூலிக்கின்றனர். பீக் அவர் எனப்படும் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளனர். கொரோனா காலத்தில் மின்சார கட்டணம் வசூலிக்கவில்லை. அதற்காக வட்டி, அபராதம் கட்டும்படி மக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். புதுவை சட்டசபையில் பல முறை மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் இதுபோன்ற ஒரு தீர்மானம் வரவில்லை என ஒன்றிய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது ஏமாற்றுவேலை. புதுவையில் நமது தனித்தன்மை, சுய கவுரவத்தை காக்க ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு தற்போதைய ஆட்சியை ஒழிக்க வேண்டும். புதுவையை சிங்கப்பூராக மாற்றுவோம் என பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் கூறினர். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. புதுவையில் ஆலைகளை முன்தேதியிட்டு மூடிவிட்டனர் என் கூறியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“