இங்கிலாந்தில் உள்ள சில இலங்கை தமிழ் அமைப்புகள் மாவீரர் நாளில் பிரபாகரன் மகள் துவாரகா பேசும் வீடியோவை ஒளிப்பரப்ப முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பும், புலனாய்வு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நவம்பர் 27 (திங்கட்கிழமை) அன்று மாவீரர் நாள் என விடுதலைப் புலிகள் அறிவித்து, அன்றைய தினம் பிரபாகரன் உரை நிகழ்த்துவது வழக்கம்.
இந்தநிலையில், இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைப்பு குழு, லண்டன் மற்றும் கிளாஸ்கோவில் (ஸ்காட்லாந்து) திங்கள்கிழமை துவாரகாவின் உரையை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோரின் படங்களை சில இலங்கைத் தமிழ் அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளை பயன்படுத்தி, தங்கள் நிதி ஆதாயங்களுக்காக உருவாக்கியுள்ளதாக சர்வதேச புலனாய்வு சமூகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதேபோல், தமிழீழ ஆதரவாளர்கள் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு ஆளாக வேண்டாம் என விடுதலைப் புலிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், துவாரகா என அடையாளம் காணப்பட்ட பெண்ணொருவரின் போலியான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி நவம்பர் 27ஆம் தேதி ஒளிப்பரப்பப்படுவது குறித்து வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழர்களின் பல்வேறு குழுக்களிடையே நடந்து வரும் சமூக ஊடகப் போரில் இருந்து, கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பாரம்பரியத்தை யார் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் வரும் நாட்களில் சண்டை மேலும் தீவிரமடையும் எனத் தெரிகிறது.
தமிழீழக் கவிஞரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான காசி ஆனந்தன், செயற்பாட்டாளர் பழ.நெடுமாறன் மற்றும் உலகத் தமிழர் கூட்டமைப்பு போன்றவர்கள், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது பிரபாகரனும் அவரது குடும்பத்தாரும் தப்பியோடிவிட்டார்கள் என்று இன்றும் நம்புபவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.