தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டாலும், அதிமுக கட்சி வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில். தமிழக தேர்தல் ஆணையம் தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான பட்டியலின் படி தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 442 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 472 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்களும், 7,246 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதில், 6,94, 845 வாக்குகள் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும், 1,76,272 வாக்காளர்கள் கொண்ட துறைமுகம் தொகுதி வாக்காளர்கள் குறைந்த தொகுதியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,48,262; பெண்கள் 3,46,476; மூன்றாம் பாலினத்தவர் 107). துறைமுகம் தொகுதியில், மொத்த வாக்காளர்கள் 1,76,272 ஆக உள்ளது. (ஆண்கள் 91,936; பெண்கள் 84,281; மூன்றாம் பாலினத்தவர் 55). இதுவரை, 4,62,597 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2021-ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று (ஜன.20) வெளியிடப்பட்டுள்ளன. இதில் நவ.16 அன்று தொடங்கிய வரைவுப் பட்டியல் வெளியீட்டை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த/ இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் நவ.16/2020-ம் தேதியிலிருந்து டிச.15/2020-ம் தேதி வரை பெறப்பட்டன.
இதன்படி சிறப்பு முகாம் காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21,82,120 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 21,39,395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பெயர் நீக்கலுக்காக 5,09,307 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 3,32,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 3,09,292 ஏற்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,84,791 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,75,365 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2021ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 8,97,694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 4,80,953; பெண்கள் 4,16,423; மூன்றாம் பாலினத்தவர் 318) 11. வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் தங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.01.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், அவர்கள் வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
இணையம் மூலமாக http://www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘‘Voter Helpline App” செயலியை பதிவிரக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட தொடர்பு மையங்களை “1950” என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் இந்த மையங்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042 521950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது”.
என குறிப்பிடப்பட்டுள்ளது.