MNM Leader Kamalhaasan Speech : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். வயதான காலத்தில் சக்கர நாற்காலியில் வந்து மக்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை என்று கூறியது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கினார். தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், கனிசமாக வாக்குகள் பெற்றனர். அதனால் குறுகிய காலத்தில் மக்கள் நீதி மய்யம் பெரும் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்றும், மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேர விருப்பும் இருந்தால் வரவேற்போம் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21-ந் தேதி சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புகிநேன், கடைசி காலத்தில் சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது கமலின் இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
என்ன ஒரு கேவலமான பிறவி இந்த @ikamalhaasan!
நீ வாங்கும் நாலு ஓட்டுக்கு மாற்றுத்திறனாளிகளை இழிவு செய்ய வேண்டுமா?! ????????#மன்னிப்புகேள்_கமல் pic.twitter.com/ahLcE7nr9L
— இசை (@isai_) February 25, 2021
கமல்ஹாசனின் இந்த பேச்சு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை கேலி கிண்டல் செய்வது போல் இருப்பதால், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தரப்பில் கண்டனக்குரல்கள் ஒலித்தன. ஆனால்இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த கமல்ஹாசன், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக பேசிய கமல், கட்சி ஆண்டுவிழாவின்போது பேசியது என்னுடைய முதுமையைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரை நான் கிண்டல் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், கருணாநிதி மீது எனக்கு இருக்கும் மரியாதை அதிகம். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் நான் சொன்னதின் உள்ளர்த்தம் அவருக்கு புரிந்திருக்கும். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதை பிடித்து தள்ளிக்கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் என்னுடைய முதுமையை பற்றியும், நான் என்ன செய்வேன், செய்ய மாட்டேன் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தேன்” “யார் கோபப்பட்டாலும் அவர்கள் வயதில் சிறியவராகவும், அனுபவத்தில் சிறியவராகவும், அறிவில் சிறியவராகவும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.